Wednesday 28 September 2011

நவராத்திரி

பெண்களை தெய்வத்துடன் ஒப்பிடும் விழா என்றே சொல்லலாம்

வீடே கோயிலாக காட்சி அளிப்பது ... நவராத்திரி நாட்களில் தான்...
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. 

எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி 
வழிபாட்டில் ஈடுபடலாம்.

அம்மனுக்காக கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது.


ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . 

1. சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.

 2. ஆடி மாதத்தில் வழிபடுவது ஆஷாட நவராத்திரி எனப்படும்.

3. புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.

4. தை மாதத்தில் வழிபடுவது சியாமளா நவராத்திரி.



இதில் சிறப்பு வாய்ந்ததாக புரட்டாசி மாதம் - சாரதா நவராத்திரியை கொண்டாடுகிறார்கள்.

புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை அன்று தொடங்கி நவமி வரை 
இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. 

தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) தசமியன்று பத்தாவது நாளாக  மஹிஷாசூரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற விஜயதசமி திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 

மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது

பூவுலகைக் காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனாம் சிவனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி.

ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அது நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.

பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.

சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.



அதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.




இச்சா சக்தி , ஞான சக்தி , கிரியா சக்தி
(இச்சை = விருப்பம், , கிரியா = செய்தல், ஆக்கல். ஞானம் =அறிவு)

=============================================================
துர்கை :  வீரத்தின் தெய்வம் சிவபிரியை இச்சா சக்தி ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம்.


நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

ஸ்ரீதுர்க்காதேவி- புகழ், உயர்வு, மங்களம், சுகம் மோட்சம் ஆகியவற்றை அருளுபவள்,

=========================================================

இலட்சுமி :செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.


ஸ்ரீ இலட்சுமி தேவி- அமைதி, அழகு, ஒளி, சாந்தி ஆகியவற்றை அருளுபவள் அவள் மகா விஷ்ணுவின் பத்தினி.
அஷ்டலஷ்மியாகவும், திருமாலின் இடம் பொருள் அறிந்து உரையாடுபவள்.


=================================================================
சரஸ்வதி :
கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை ஞான சக்தி சரஸ்வதி தாயவள்.















அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

ஸ்ரீசரஸ்வதி தேவி சகல வித்தைகளுக்கும் அதிபதியாய் விளங்கி வாக்கு, அறிவு, ஞானம் ஆகியவற்றை அருளி சந்தேகங்களை நீக்கக் கூடிய வடிவமாகவும், இசை நாதத்தில் மூழ்கி மக்களின் கவலைகளை கல்விஞானத்தின் மூலம் நீக்குகின்றாள்.



வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்.


ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை:

1.
1.மகேஸ்வரி
                                                   
2.
2. கௌமாரி (ராஜ ராஜேஸ்வரி)
3.
3 . வராகி

இலட்சுமி:

 4.
4. மகா லெட்சுமி

 5.
5. வைஷ்ணவி

6.
6. சண்டிகா தேவி (எ) இந்திராணி.
சரஸ்வதி :

7.
7. சரஸ்வதி 

8.
8. நாரசிம்மி

 , 9.
9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

நவ துர்காவாக வழிபடும் போது அன்னையை, அகிலாண்ட நாயகியை, ஆதி பராசக்தியை, ஜகத்ஜனனியை, மஹா த்ரிபுரசுந்தரியை

கொலு


1. முதலாம்படி:
முதலாம்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

2. இரண்டாம்படி:
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.

3. மூன்றாம்படி:
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

4. நான்காம்படி:
நாலாம்படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


5. ஐந்தாம்படி:
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

6. ஆறாம்படி:
ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

7. ஏழாம்படி:
மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.

8. எட்டாம்படி:
எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

9. ஒன்பதாம்படி:
ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கமாக உள்ளது.


நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-


சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.
முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.
இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
 இவள் மிகவும் கோபக்காரி.
நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

முதல் நாளில் - ஷைலபுத்ரி
நவ கன்னிகையாக வழிபடும் போது முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி


 புஸ்பம்:
வெ‌ண்தாமரை, செ‌ந்தாமரை, மல்லிகை மலர்களால் மகே‌‌ஸ்வ‌ரியை அர்ச்சிக்க வேண்டும்.


பூஜை:
மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.




*********************************
2. இரண்டாம் நாள் :-

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.
 சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.
பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி

நவ கன்னிகையாக வழிபடும் போது இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
புஸ்பம்:
மல்லிகை மலர்களால் அர்ச்சிப்பது நலம் பயக்கும்.

 பூஜை :
இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.



******************************
3. மூன்றாம் நாள் :-


மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும்.
இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.
இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.
கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள்.
யானை வாகனம் கொண்டவள்.
விருத்திராசுரனை அழித்தவள்.
தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும்.
பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு
இவளின் அருட்பார்வை வேண்டும்.

மூன்றாம் நாள் - சந்தரகாந்தா

நவ கன்னிகையாக வழிபடும் போது மூன்றாம் நாளில் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி

புஸ்பம்:
மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்கிறோம்.

பூஜை:
துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.



*******************************

4. நான்காம் நாள் :-


சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள்.
இவளின் வாகனம் கருடன்.

நான்காம் நாள் - கூஷ்மாண்டா

நவ கன்னிகையாக வழிபடும் போது நான்காம் நாளில் - 5வயதுக் குழந்தை - ரோகிணி


புஸ்பம்:
ஜாதிமல்லிகை மற்றும் சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிக்கவும்.

பூஜை:
ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா ‌ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸர‌ஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.



****************************

5. ஐந்தாம் நாள் :-


ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.
அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.
திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.
சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம்.
கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற
அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா
நவ கன்னிகையாக வழிபடும் போது ஐந்தாம் நாளில் - 6 வயதுக் குழந்தை - காளிகா

புஸ்பம்:
முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.

பூஜை:
லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
*******************************

6. ஆறாம் நாள் :-

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.
 மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.
தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
 ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள்.

நவ கன்னிகையாக வழிபடும் போது ஆறாம் நாள் - காத்யாயனி -7 வயதுக் குழந்தை - சண்டிகா


புஸ்பம் :
செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.

பூஜை:
லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹ‌ஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.



*******************************
7. ஏழாம் நாள் :-


ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும்.
கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.
 விஷ்ணுவின் பத்தினியாவாள்.
பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

நவ கன்னிகையாக வழிபடும் போது ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி -  - காலராத்ரி

புஸ்பம்:
மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

பூஜை :
ஸ்ரீ சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ சாரதா புஜங்க ம‌ந்‌திர‌ம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.


ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.

************************
8. எட்டாம் நாள் :-


இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.
மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக
 சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

நவ கன்னிகையாக வழிபடும் போது எட்டாம் நாள் - மஹா கௌரி-9 வயதுக் குழந்தை - துர்க்கா

புஸ்பம்:
ரோஜா மற்றும் சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

பூஜை:
சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.


எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
*****************************
9. ஒன்பதாம் நாள் :-


இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும்.
அன்ன வாகனத்தில் இருப்பவள்.
வாக்கிற்கு அதிபதியாவாள்.
ஞானசொரூபமானவள்.
கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி என்ற ரூபத்தில் வணங்குகின்றோம்.
 நவ கன்னிகையாக வழிபடும் போது 10 வயதுக் குழந்தை - சுபத்ரா என்று வணங்குகின்றோம்.

புஸ்பம்:
செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வளம் பெருகும்.

பூஜை:
சர‌ஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.





துர்க்கா தேவி நாமம்

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ?ம்யை நம
ஓம் வரலெக்ஷ?ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

நவராத்திரி ஸ்லோகம்

கிராõஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

கன்னிகா பூஜை

நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம்.
 ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம்.

முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

நவராத்திரி புராண கதை :


முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.


அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

விஜய் - வெற்றி; தசமி - பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்

 கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 நாட்களிலும் (நவ-ஒன்பது) சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட தாங்கள் அறிந்து வைத்துள்ள பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். கலைகளும் வளர்க்கப்படுகிறது.
கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன - புதிய பொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொலுவால் ஏற்படுகிறது என்றால் மிகையில்லை.
இந்திய தட்பவெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்மையை துர்கையாக வழிபடுவது நவதுர்கா வழிபாடு. நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

 தீய சக்திகள் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை நம்மை நெருங்காமல் இருக்க துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வணங்கி வழிபடுகிறோம்

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்