மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு - முருகா பிறவி பிணி தீரு
உன்னை ஒரு போதும் எண்ண மறவேன்
சென்னி மலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னைச் சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே
வள்ளல் உனை நாடு வள்ளி மலைதேடி
வருவோர்க்கும் இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே
திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
தென்சேரி மலைக்கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற குமரா
வருந்திவரும் அடியவர்கள் படுந்துயரம் தீர்த்தாய்
குருந்தமலை மீதினிலே கொஞ்சும்வேலே
வற்றாத கருணை மழை நன்றாய் எனப்பொழியும்
வட்டமலை தெய்வமே வெற்றிவேலே
அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்றும் ஓடவும்
சமர் புரிந்த குமரகோட்டத் தவ மணியே
அன்பன் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருட்பாவின் வெள்ளம்
பொங்கச் செய்த கந்தகோட்டத் தமிழ்க்கனியே
தஞ்சமென்று வந்து உன்னை கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமையா சுடரொளியே
வீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல்விடுத்து நின்றவா
ஏறிவரும் மயிலின் பேரும் விளங்க ஒரு
ஊரை மயிலம் எனக் கொண்டவா
பக்தர்கள் சேரூர் பழவினை தீருர்
உத்திரமேருர் உறைபவனே
எங்குமில்லாத விதத்தினிலே பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே
மயிலை ஆடச் செய்தவனே
வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன் பெற்ற
முருகனே ஷண்முகா முத்துக்குமரா
சரவணா சக்திவேலாயுதா சூரசம்காரா
திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு
தன் கண்ணிலே சொன்ன சுப்ரமணியா
கந்தன் குடி வாழ்ந்திடும் கந்தனே அன்பரின்
கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்ணியா
தக்க தருணத்திலே பக்கத் துணையிருப்பாய்
சிக்கலை தீர்த்து வைப்பாய் - ஜெகம் புகழ்
சிக்கல் சிங்கார வேலா
செட்டிமகன் என்னும் இறைவா செந்தமிழ்த் தலைவா
எட்டிக்குடி தன்னிலே அகஸ்தியன் ஏற்ற குருவானவா
பழந்தமிழ்க் கொண்ட அருணகிரி அன்று
திருபுகழ் பாடிய வயலூரா
புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப்
படை போற்றும் விராலிமலை வீரா
கொன்றதொரு சூரனைக் கோலமயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையை தீரய்யா
கழுகுமலையில் வாழும் வேலய்யா